பருவநிலை மாநாடு வெற்றிப்பெற மரக்கன்று நடவு
காலநிலை மாற்றத்துக்கான தீவிரத்தை குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு, வெற்றி பெற வேண்டி மரக்கன்று நடப்பட்டது.
சிஓபி., 20 எனப்படும், காலநிலை மாற்றத்துக்கான தீவிரத்தை குறைப்பது தொடர்பாக பருவநிலை மாநாடு, ஸ்காட்லாந்து, கிளாஸ்கோவில் வரும், 12ம் தேதி நடக்க இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். மாநாடு வெற்றி பெற வேண்டி, மரக்கன்று நடும் நிகழ்ச்சி, பல்லடம் அருகேயுள்ள, காரணம்பேட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் நடந்தது.
ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பூங்கா செயலாளர் பாலசுப்பிரமணியம், தி சாய் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் கோபிநாத் அருணாச்சலம், செயலாளர் சைலேஷ், திட்ட தலைவர் வேலு, பூங்கா தலைவர் மாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பருவநிலை மாநாடு வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'சிஓபி' என்ற வடிவமைப்புடன் பூச்செடிகள் நடப்பட்டன.