மடத்துக்குளம் பகுதியில் தொடரும் மழை; கொப்பரை காய வைக்க முடியாமல் அவதி
மடத்துக்குளம் பகுதியில் தொடரும் மழை காரணமாக கொப்பரை காய வைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.;
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், மடத்துக்குளம் சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகிறது. தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு தேவையான தேங்காய், பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காய் பருப்புகள், தேங்காய் எண்ணெய் ஆட்டுவதற்காக வெயிலில் காய வைத்துள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல லட்சம் மதிப்பிலான கொப்பரை தேங்காய் எண்ணெய்க்கு பயன்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. மழையின் காரணமாக கொப்பரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.