காங்கயம் அருகே பெண் கல்லால் அடித்து கொலை

காங்கயம் அருகே, காட்டுப்பாதையில் தனியாக நடந்து வந்த பெண் கல்லால் தாக்கி, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-09-12 05:41 GMT

காங்கயம் அருகே, பெண் கொலை.

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே வஞ்சிபாளையம், கரியாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருடைய மனைவி ரேவதி (வயது 35). இவர்களது மகன் ஹரிஷ் (8). கடந்த சில ஆண்டுகளாக ரேவதியின் கணவர் ரத்தினசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. இதையடுத்து ரேவதி வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு, கடந்த 4 ஆண்டுகளாக  வேலைக்கு சென்று வந்தார். தினமும் வேலை முடிந்ததும், காட்டுப்பாதை வழியாக வீட்டிற்கு நடந்து வருவதை ரேவதி வழக்கம்.

இந்நிலையில் ரேவதி நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின், பிற்பகல் 3 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும், அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து, ரேவதியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  ரேவதி வேலை முடிந்து, வழக்கமாக நடந்து வரும் காட்டுவழிப்பாதையில் சென்று பார்த்தபோது, கண்ணாங்காட்டு தோட்டம் பகுதியில் ரேவதியின் மதிய உணவு பை மற்றும் ரேவதியின் காலணி ஆகியவை கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதியின் உறவினர்கள் அப்பகுதியில் சுற்றி பார்த்தனர். அப்போது அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி.கிளை வாய்க்கால் கரையோரம் உள்ள முட்புதர் அருகே ரேவதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குவந்த காங்கயம் டிஎஸ்பி பார்த்தீபன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.  திருப்பூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் ரேவதியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது.

இதற்கிடையில் அங்கு திரண்ட ரேவதியின் உறவினர்கள், 'ரேவதியை கொன்ற கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை உடலை எடுக்க விடமாட்டோம்' என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'மிக விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம்' என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, ரேவதியின் உறவினர்கள் உடலை எடுத்துச்செல்ல அனுமதித்தனர். பின்னர், ரேவதியின் உடல்  திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News