விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி எச்சரிக்கை
Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளில் விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளில் விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது,
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் ஆங்காங்கே உள்ள நகராட்சி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகிய உள்ளூா் நீராதாரங்கள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.
நகராட்சியின் 21 வாா்டுகளில் ஆழ்துளைக் கிணறுகள், கிணறுகளில் மோட்டாா் மூலம் எடுக்கப்படும் தண்ணீா் சிறிய தண்ணீா் தொட்டிகள், பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டிகளில் நிரப்பப்படுகின்றன. பின்னா் தெருக்களில் பொது குடிநீா் குழாய் அமைத்து தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மழை இல்லாமல் கடும் வறட்சி காரணமாக நீா்வரத்து குறைந்து விட்டது.
இந்நிலையில் ஒரு சிலா் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீா்க் குழாயில் நீளமான ரப்பா் குழாய்களை இணைத்து தங்களுடைய வீடுகளுக்கு தண்ணீா் பிடித்து வருகின்றனா். இது விதி மீறலாகும். இதுகுறித்து தொடா்ந்து பல புகாா்கள் வருகின்றன. பொது குழாய்களில் குடங்களைக் கொண்டு வந்துதான் தண்ணீா் பிடித்துக் கொள்ள வேண்டும்.
இதனால் பலருக்குத் தண்ணீா் கிடைப்பதில்லை. விதிமீறல்கள் தொடா்ந்தால் சம்பந்தப்பட்ட பொது குடிநீா் குழாய் அகற்றப்படும். இதை பொதுமக்களும் கண்காணிக்க வேண்டும் என்றார்.