சிவன்மலைக்கு செல்ல, மலைப்பாதை இன்று காலை திறப்பு; வாகனங்களுக்கு அனுமதி
Tirupur News,Tirupur News Today- சிவன்மலையில், சாலை புதுப்பித்தல் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், மலைப்பாதை வழி இன்று காலை திறக்கப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலைக்கு செல்லும் பாதை புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காங்கயம் அருகே சிவன்மலையில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டுகள் வழியாகவும் செல்ல பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஒருசில பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக மலையின் உச்சிக்கு சென்று முருகனை தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களிேலயே மலைப்பாதை வழியாக கோவில் வரை சென்று சுவாமியை வணங்கினா். கோவில் தரப்பிலும், பக்தர்களுக்காக ரூ. 10 கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் வாகனங்கள் செல்லும் மலைப்பாதை ஆங்காங்கே பழுதடைந்து இருந்தது. இதனால் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து . மலைக்கோவில் சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைய துறை சார்பில் சாலையை புதுப்பிக்க, ரூ.2 கோடி 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இதன் காரணமாக கடந்த மே மாதம் 19- ம் தேதி முதல் மலைக்கோவில் சாலை அடைக்கப்பட்டு, அவ்வழித்தடத்தில் வாகனங்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் தங்களது வாகனங்களை மலை அடிவாரத்தில் நிறுத்தி விட்டு, படிக்கட்டுகள் வழியாக கோவிலுக்கு சென்று வந்தனர். செங்குத்தான படிக்கட்டுகள் என்பதால், எண்ணிக்கை குறைவு என்றாலும் வயதானவர்கள், குழந்தைகள், நோய் வாய்ப்பட்டவர்கள் படிக்கட்டுகளில் ஏறி, இறங்க மிகவும் சிரமப்பட்டனர்.
இன்று அதிகாலை சிவன்மலை கோவில் மலைப்பாதை திறக்கப்பட்டது.
இந்நிலையில் சாலையை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடந்து முடிவுற்ற நிலையில் இன்று புதுப்பிக்கப்பட்ட மலைக்கோவில் சாலை போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) அன்னக்கொடி தலைமை வகித்தார். இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு ஆடிப்பெருக்கு நாளில் மலைக்கோவில் சாலை திறந்து விடப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.