சரிந்தது தக்காளி விலை; கிலோ ரூ. 7க்கு விற்பனை
Tirupur News. Tirupur News Today- காங்கயம் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Tirupur News. Tirupur News Today- காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள், வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். வாரச்சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது.
இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை கூடும் நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள், தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் நகரமக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வா். வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.23-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை குறைந்தது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு கிலோ தக்காளி வாங்கி செல்பவர்கள், 3 கிலோ வரை வாங்கிச் சென்றனர்.
மேலும் தக்காளியின் வரத்து அதிகரித்து காணப்படுவதால் வரும் நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடைகளில் விலை இரட்டிப்பாக அதிகரிப்பு
காய்கறி சந்தைகளில், தக்காளி விலை ஏழு ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், மளிகை கடைகளில் தக்காளி கிலோ ரூ. 15 மற்றும் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்படி கூடுதலாக, இரட்டிப்பு விலை வைத்து, கடைக்காரர்கள் தக்காளியை விற்பது வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்கிறது. அதுவும், சமையலில் தக்காளி மிக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தினமும் தக்காளி பயன்பாடு, சமையலறையில் தவிர்க்க முடியாத சூழலில், கூடுதல் விலை வைப்பது இல்லத்தரசிகளை வெறுப்படையச் செய்துள்ளது.