காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், 220 மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு
tirupur News, tirupur News today-காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 220 மாணவ, மாணவியருக்கு இளங்கலை, முதுகலை பட்டம் வழங்கப்பட்டது.
tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம், காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் நசீம் ஜான் வரவேற்றார். விழாவில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல் துறையில் பயின்று தேர்ச்சி பெற்ற 220 இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.
அப்போது அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது,
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை சார்பில் நகர, கிராம பகுதிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவ மாணவிகள் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மூலம் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி கல்வி பயிலுவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி கல்லூரி மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த கல்லூரி பஸ் ஸ்டாப்பில் ரூ 14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்காக புதிதாக நிழற்குடை விரைவில் அமைக்கப்பட உள்ளது. மக்கள் நலனில், அதிக அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, பள்ளி மற்றும் கல்லூாரி மாணவ, மாணவியர் கல்வி நலனில் அக்கறை கொண்டு, பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக, அரசு பள்ளிகளில், குழந்தைகளுக்கான காலை நேர உணவு திட்டம், மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது. இது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்லூரி அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், கல்லூரி கணிதத்துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.