ஊதியூரில் உறுதியான சிறுத்தை நடமாட்டம்; தேடுதலில் வனத்துறை தீவிரம்
tirupur News, tirupur News today- ஊதியூர் அருகே, இரவில் சிறுத்தை ரோட்டை கடந்து சென்றதாக தகவல் தெரிய வந்தததை அடுத்து, வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன், ஊதியூர் அடுத்துள்ள தாயம்பாளையம், ரத்தினசாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் இருந்த பட்டியில் புகுந்த மர்ம விலங்கு ஒரு ஆட்டை தூக்கிச் சென்றது. ஊதியூர் மலையடிவாரத்தில் ஒரு இடத்தில் ஆடு கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. உடனடியாக இதுபற்றி வனக்குழு தலைவர் கிருஷ்ணகுமார், காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
காங்கயம் வனத்துறை அலுவலர் தனபால் மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மர்ம விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தபோது, அது சிறுத்தையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அடுத்த சில நாட்களில் ஊதியூர் பஸ் ஸ்டாப் அருகில், பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை மலையடிவாரத்துக்கு இழுத்துச் சென்று, கொன்று தின்று போட்டிருந்தது. அந்தப் பகுதியில் ஆய்வு செய்தபோது சிறுத்தையின் கால்தடம் பதிந்திருந்தது. அதைத் தொடர்ந்து சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊதியூர் மலையடிவாரத்தில் காசிலிங்கம்பாளையம் சாலையில் சாமிநாதன் என்ற விவசாயி தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த மாட்டுக் கன்றை இழுத்துச் சென்று, சிறிது தூரத்தில் கொன்று போட்டிருந்தது. இருப்பினும் சிறுத்தையை யாரும் நேரில் பார்க்கவில்லை.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி காலை ஊதியூர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் அருகே அதே ஊரைச் சேர்ந்த பெண் இருவர், மொபட்டில் சென்ற போது சாலையோரத்தில் இருந்த மரத்திலிருந்து குதித்த சிறுத்தை மலைக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க காங்கயம் வனச்சரக அலுவலர் தனபால் தலைமையில் வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையால் ஆடு, மாடுகள் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட இடங்களில், கேமராக்களை பொருத்தியுள்ளனர். மேலும் கூண்டுகளைக் கொண்டு வந்து அதற்குள் ஆடுகளைக் கட்டி ஆங்காங்கே வைத்துள்ளனர். டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 4 நாட்களுக்கு மேலாக சிறுத்தை பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் இரவு தாராபுரம்-காங்கயம் ரோட்டில் வட்டமலைபாளையம் பிரிவுக்கும், குண்டடம் பிரிவிற்கும் இடைப்பட்ட சாலை தோட்டம் அருகில் சிறுத்தை ரோட்டை சாகவாசமாக கடந்து சென்றதை, அந்த வழியாக பைக்கில் சென்ற ஈரோட்டை சேர்ந்த சுப்புராஜ் என்ற இன்ஜினியர் பார்த்துள்ளார். உடனடியாக இதுபற்றி ஊதியூர் போலீசில் தகவல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மலைப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு போவதையும் பக்தர்கள் தவிர்த்து வருகின்றனர். கூடுதலாக இன்னும் சில இடங்களில் கூண்டுகளை வைக்க, பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.