ஊதியூரில் ‘நிரந்தரமாக’ தங்கிய சிறுத்தை; பொதுமக்கள் பீதி
Tirupur News, Tirupur News today- காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் வனப்பகுதியில், சிறுத்தை ஒன்றரை மாதங்களாக, இருந்து வரும் நிலையில் மக்கள் பீதியில் உள்ளனர்.
Tirupur News, Tirupur News today - ஊதியூர் மலையடிவார பகுதியில், கடந்த 30 நாட்களுக்கு பின், நேற்று ஒரு நாயை சிறுத்தை வேட்டையாடி தூக்கிச்சென்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்து, ஊதியூர் காணப்படுகிறது. ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. இதையடுத்து, காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வைத்து, சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
மேலும், வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாமலும், கூண்டுகளில் சிக்காமலும், வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை குறித்த கால் தடங்கள், காட்சிகள் குறித்து எதுவும் தென்படவில்லை. இதனால் சிறுத்தை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததா? அல்லது வேறு எங்கேயும் வனப்பகுதியில் உள்ள குகைகளில் பதுங்கி இருக்கிறதா? என்ற குழப்பத்தில், வனத்துறையினர் இருந்து வந்தனர்.
இந்நிலையில், மலையடிவார பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு பின் சிறுத்தை நேற்று மீண்டும் தன் வேட்டையை தொடங்கியது. சிறுத்தை வேறு பகுதிக்கு சென்றுவிட்டதோ என்று சற்று நிம்மதியாக இருந்த ஊதியூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு நேற்று காலை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஊதியூர் - காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டி இருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்றது. பாறையில் அமர்ந்திருந்தது நாயை சிறுத்தை தூக்கிச்சென்றதை நேரில் பார்த்த ஊதியூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நேரடியாக பார்த்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நேற்று காலை சுமார் 6.15 மணியளவில் ஊதியூர் - காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் வந்த போது சிறிது தொலைவில் அப்பகுதியில் உள்ள ஒரு பாறை மீது சிறுத்தை உட்கார்ந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் சிறுத்தையை பார்த்துக்கொண்டிருந்தேன். 10 நிமிடங்கள் அமைதியாக பாறை மீது உட்கார்ந்திருந்த சிறுத்தை பின்னர் மெதுவாக எழுந்து அவ்விடத்தை விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தேன், என்றார்.
(கோப்பு படம் - சிறுத்தை)
காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறுகையில் "கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை குறித்த கால்தடம் மற்றும் தகவல்கள் ஏதும் கிடைக்க வில்லை. இதனால் சிறுத்தை வேறு பகுதிக்கு சென்றுவிட்டது என்று நினைத்தோம். ஆனால் நேற்று காலை மீண்டும் சிறுத்தை ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டி இருந்த நாயை தூக்கிச்சென்றுள்ளது. வனப்பகுதியில் இருப்பது உறுதியானது
தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்று சிறுத்தையின் கால்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதன் மூலம் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளோம் கூண்டுகளை தயார்படுத்தி மீண்டும் சிறுத்தையை பிடிக்க முயற்சிக்க உள்ளோம். ரோந்து பணியை தீவிரப்படுத்த உள்ளோம். பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். சிறுத்தை எங்காவது தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.