நத்தக்காடையூா் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
Tirupur News- நத்தக்காடையூா் அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.;
Tirupur News,Tirupur News Today- நத்தக்காடையூா் அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து தாராபுரம், காங்கயம், நத்தக்காடையூா், ஈரோடு வழியாக சேலத்துக்கு செல்லும் ஒரு அரசுப் பேருந்து பழனி பேருந்து நிலையத்தில் இருந்து (நேற்று) ஞாயிற்றுக்கிழமை மதியம் புறப்பட தயாராக நின்றது. அந்தப் பேருந்தில் பழையகோட்டை பகுதியைச் சோ்ந்த சில பயணிகள் ஏற முற்பட்டபோது, இந்தப் பேருந்து பழையகோட்டையில் நிற்காது எனக்கூறி அவா்களை பேருந்தில் ஏற்ற நடத்துநா் மறுத்துள்ளாா். எங்கள் ஊர் வழியாக பஸ் செல்லும் போது, ஏன் அங்கு நிறுத்திச் செல்லக் கூடாது என அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் நடத்துனர் அதெல்லாம் நிறுத்த முடியாது என்று மறுத்து விட்டார்.
பின்னா், அந்தப் பயணிகள் மற்றொரு பேருந்து மூலம் பழையகோட்டைக்கு வந்துள்ளனா். ஊா் வந்ததும் பேருந்தில் ஏற்ற மறுத்தது குறித்து உறவினா்களிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மாலை மீண்டும் பழனி திரும்பிய அந்தப் பேருந்து தடுத்து நிறுத்திய மக்கள் ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பழையகோட்டை பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீங்கள் ஏன் பழையகோட்டையில் பேருந்து நிற்காது எனக்கூறி பயணிகளை ஏற்ற மறுத்துள்ளீா்கள் என கேள்வி எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இனிவரும் நாள்களில் பழையகோட்டை பயணிகளை ஏற்றி, இறக்குவோம் என பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உறுதியளித்தனா்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.