சுத்தமான பலகாரங்களை விற்பனை செய்யாத கடைகள் சீல் வைக்கப்படும்; முத்தூரில் அதிகாரிகள் எச்சரிக்கை
Tirupur News- முத்தூரில் சுத்தமான பலகாரங்களை விற்பனை செய்யாத கடைகள் சீல் வைக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- முத்தூர் பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கு சுத்தமான பலகாரங்களை விற்பனை செய்யாத கடைகள் சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
வெள்ளகோவில், முத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் முத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள், தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் தவறாமல் உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
காலாவதியாக உள்ள இனிப்பு, கார உணவு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதை தவிர்த்தல் வேண்டும். நல்ல சுத்தமான உணவு பொருட்கள், சுத்தமான எண்ணெய் ஆகிவற்றை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் புதிதாக தயார் செய்யப்பட்ட பலகாரத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே முத்தூர் நகர, கிராம பகுதி தீபாவளி பண்டிகை இனிப்பு காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் இனிப்புகள், காரங்கள், காலாவதியான உணவுப் பொருட்கள் ஆகியவற்றினை விற்பனை செய்ய வேண்டாம்.
கெட்டுப்போன இனிப்பு கார வகைகள், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் மீது உணவு பாதுகாப்பு துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.