தாராபுரத்தில் ஆவணங்கள் சரியாக இல்லாததால், 36.47 டன் எடை விதை நெல் விற்பனை செய்யத் தடை
Tirupur News- தாராபுரம் பகுதியில் பராமரிப்பு ஆவணங்கள் சரியாக இல்லாததால், 36.47 டன் எடை விதை நெல் விற்பனை செய்ய, அதிகாரிகள் தடை விதித்தனர்.;
Tirupur News,Tirupur News Today- ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையில், தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியாா் நெல் விதை உற்பத்தி, விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு, பவானி, கோபி, தாராபுரம், காங்கயம் பகுதியைச் சோ்ந்த அலுவலா்கள் சோதனை மேற்கொண்டனா்.
இதில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு விலை, உண்மை நிலை விதைகளுக்கான ஆவணங்கள், முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கை உள்ளிட்டவற்றை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது விதை இருப்புக்கும், புத்தக இருப்புக்கும் உள்ள வேறுபாடு, உண்மை நிலை விதைகளுக்கான விதையின் ஆதார ஆவணங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து, 36.47 டன் எடையுள்ள விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி கூறியதாவது,
விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும்போது, விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில் விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயா்-முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விதை விற்பனை தொடா்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் மற்றும் விதைக் கட்டுப்பாடு ஆணையத்தின்படி விதிமீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றாா்.