காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம்
Tirupur News- காங்கயத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tirupur News,Tirupur News Today-இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம் தாலுகா, குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளையம் புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த 20 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனுக்கள் கொடுத்தனா். இதையடுத்து, வடசின்னாரிபாளையம் ஊராட்சிப் பகுதியில் 20 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் அவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை."
இந்நிலையில், ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் பவுத்தன் தலைமையில் காங்கயம் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பட்டா கேட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது,
காங்கயம் தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் அட்டை, புகைப்படம், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, குடியிருப்பு சான்றிதழ், கிராம நிா்வாக அலுவலா் சான்று என அனைத்து ஆவணங்கள் கொடுத்தும் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றனா்.
இது குறித்து காங்கயம் ஆதிதிராவிட நலத் துறை தனி வட்டாட்சியா் செல்வி கூறியதாவது,
இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கு 20 குடும்பங்களைச் சோ்ந்தவா்களும் தகுதி வாய்ந்தவா்கள்தான் என நிழலி கிராம நிா்வாக அலுவலா் தெரிவித்துள்ளாா். மேலும், மனுதாரா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா். மேற்படி கிராமத்தில் ஆதிதிராவிடா் நத்தம் காலி இடம் ஏதும் இல்லை என்பதால், இது குறித்து காங்கயம் வருவாய் வட்டாட்சியரிடம் ஆலோசனை மேற்கொண்டு, இவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதையடுத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளா் கனகராஜ், ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் மகளிரணி செயலாளா்கள் பவித்ரா, வீரமணி, தாராபுரம் ஒன்றியப் பொறுப்பாளா் கிட்டுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.