சிவன்மலையில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

Tirupur News- சிவன்மலையில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனர்.;

Update: 2024-01-10 07:03 GMT

Tirupur News- சிவன்மலையில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- காங்கயத்தை அடுத்த சிவன்மலை பகுதியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் கட்டுமானப் பணியை நிறுத்தக்கோரி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் மனு அளித்துள்ளனா்.

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி போன்ற சில அசைவ உணவுகளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுதாகார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக குடல் புற்றுநோய் பல மடங்கு அதிகரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் முறையற்ற உணவுப் பழக்கவழக்கமே ஆகும்.

அதன் தொடர்ச்சியாக குடல் புற்றுநோய் குறித்து 10 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகள் தங்களது ஆராய்சி முடிவை உலக சுகாதார அமைப்பிடம் தாக்கல் செய்தனர். அதில், குடல் புற்றுநோய்க்கு கடைகளில் விற்பனையாகும் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, சாஸ்ஜேஜ் போன்றவற்றை உண்பதே முக்கிய காரணம் என சுட்டிக் காட்டப்பட்டது. இதனால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட், மது ஆகியவற்றின் பட்டியலில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியும் சேர்ந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி உள்ளிட்ட பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் மாமிசங்கள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது மட்டுமல்ல, புற்றுநோய் வரும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிவப்பு நிற இறைச்சிகளில் புற்றுநோய் உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஆய்வின் முடிவை இறைச்சி தொழில் நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. வெறும் கோட்பாடு அளவிலான ஆபத்துகளையும் இந்த ஆய்வு கணக்கில் சேர்த்துள்ளதாக அவை வாதிடுகின்றன.

அதேசமயம், இறைச்சிகளால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களையும் மறுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், ‘இதற்காக உடனடியாக அனைவரும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் எனக் கூறவில்லை. அதற்குப் பதில் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் அத்தகைய உணவுகளின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்' என அறிவுரை கூறுகின்றன.

ஆனால் வெளிநாடுகளில் மட்டுமின்றி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதியதாகவும் அமைக்கப்பட்டும் வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட கரட்டுப்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறைச்சி பதப்படுத்தி, ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அமைய உள்ளது. இதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் காங்கயம் வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளனா்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

சிவன்மலை அருகே நிறுவப்படும் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தினால் நிலத்தின்நீா் மற்றும் நில வளம் பாதிக்கப்படும். இறைச்சிக் கழிவில் இருந்து நோய்த் தொற்று கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்தப் பகுதியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தை அனுமதிக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகிய துறை அலுவலா்களிடமும் மனு கொடுத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News