அதிக பணம், நகைகளை வங்கிகளில் பத்திரப்படுத்த போலீசார் அறிவுறுத்தல்
Tirupur News Tamil -வீடுகளில் உள்ள பீரோக்களில் அதிக பணம், நகைகளை வைத்திருப்பது பாதுகாப்பு இல்லை. வங்கிகளில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என, காங்கயம் போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன் அறிவுறுத்தினார்.;
Tirupur News Tamil -தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வீடுகளில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் ஏமாறாத வகையில், முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக லட்சக்கணக்கில் பணம், 10 சவரனுக்கும் அதிகமான நகைகள் என, வீடுகளில் வைத்திருப்பது பாதுகாப்பற்றது என்பதால், வங்கிகளில் பத்திரமாக வைத்துக்கொள்வதே பாதுகாப்பானது. அதை, தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தற்போது புதிய நகைகள் வாங்குதல், புத்தாடைகள் எடுப்பது என, பணப்புழக்கம் மக்களிடம் அதிகமாக இருப்பதால், திருடர்களிடம் இருந்து தங்களது பணம், நகைகளை பாதுகாத்துக்கொள்வதில், விழிப்புணர்வோடு உஷாராக இருக்க வேண்டும்.
வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில், கஞ்சா புகையிலை ஒழிப்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் கனியரசி தலைமை வகித்தார். காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர் ரமாதேவி, எஸ்ஐ முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன் பேசியதாவது,
கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அதனால் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் குட்கா, புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால், உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும், கஞ்சா, புகையிலை போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை பயன்படுத்துவோர் பயமின்றி திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்ச சம்பவங்களில் ஈடுபடுகின்றனர், அதனால் கஞ்சா, புகையிலை இல்லாத தமிழகமாக மாற்ற வேண்டும். தற்போது தமிழகத்தில் கஞ்சா பயிர் செய்வதில்லை ஆந்திரா மாநிலங்களில் மலைப்பிரதேசங்களில்தான் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.
ஆந்திராவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு ஆயுதம் வாங்க, கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதற்காக, ஆந்திராவில் மலைப்பகுதியில், பயிரிட்டு கஞ்சா விற்பனை செய்கின்றனர், தமிழக வியபாரிகள் ஆந்திரா சென்று வாங்கி வருகின்றனர், அப்படி வாங்கி வரும் கஞ்சாவை சிகரெட் மூலம் பயன்படுத்துகின்றனர். ஆகவே இதை முதலில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்காக வெள்ளகோவில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும், தனியாக ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்படுவார். அவரிடம் தங்களது பகுதியில் உள்ள குற்றங்ங்கள் பற்றி தெரிவிக்கலாம்.
மேலும், வீட்டை பூட்டிவிட்டு பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது விலை மதிப்பு மிக்க நகை மற்றும் பணத்தை பீரோவில் வைத்து விட்டு செல்ல வேண்டாம், வங்கியிலோ அல்லது பாதுகாப்பான மறைவான இடத்திலோ வைத்துச் செல்ல வேண்டும், அப்படி வெளியில் செல்லும்போது, வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டு சென்றால், போலீசார் கண்காணிக்க ஏதுவாக இருக்கும், என்றார்.
இக்கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் முருகானந்தன், நகர்மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2