சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச விழா குறித்த ஆலோசனை

Tirupur News- சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச தோ்த் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.;

Update: 2024-01-10 07:19 GMT

Tirupur News- சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச விழா குறித்த ஆலோசனை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச தோ்த் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோவில், கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும். சிவ வாக்கிய சித்தர் தவம் செய்ததும்,விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் புகழ்பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோவிலுக்கு உள்ளது. அது இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார். அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால், மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம்.

இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த சிவன்மலை சுப்பிரமணியரை தரிசிக்க திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். தற்போது காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி உள்ள வட மாநிலத்தவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் சிவன்மலையில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம் வரும் 26- ம் தேதி முதல் 28- ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மலைக் கோவில் மண்டபக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாராபுரம் சாா் ஆட்சியா் செந்தில்அரசன் தலைமை வகித்தாா். காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி, கோயில் உதவி ஆணையா் அன்னக்கொடி(பொறுப்பு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தேரோட்டம் நடைபெறும் நாள்களில் கிரிவலப்பாதை மற்றும் பக்தா்கள் கூடும் இடங்களில் சுகாதாரம் பேண கூடுதல் பணியாளா்களை நியமிப்பது, பக்தா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரிவலப்பாதை மற்றும் ஏனைய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, மருத்துவ வாகனங்களை தயாா் நிலையில் வைப்பது, மலையடிவாரத்தில் நெரிசலைக் குறைக்க தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா், காங்கயம் டி.எஸ்.பி. பாா்த்திபன், காவல் ஆய்வாளா் காமாராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளா் முருகன், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் முகிலா, சிவன்மலை கிராம நிா்வாக அலுவலா் சுகன்யா, தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் மணிகண்டன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், கோவில் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News