காங்கயம் அருகே விபத்தில் சிக்கிய வாலிபர்களுக்கு உதவிய அமைச்சர் அமைச்சர் சாமிநாதன்
Tirupur News. Tirupur News Today- காங்கயம் அருகில், கார் கவிழ்ந்த விபத்தில் 5 வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்ற அமைச்சர் சாமிநாதன், காயமடைந்தவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார்.
Tirupur News. Tirupur News Today- காங்கயம், ஊதியூர் அருகே சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 27), பிரகாஷ் (32), மணிகண்டன் (29), குமார் (32), மோகனசுந்தரம் (17). இவர்கள் 5 பேரும் கொடைக்கானல் சுற்றுலா சென்று விட்டு, நேற்று காரில் சேலம் நோக்கி வந்தனர். இவர்களது கார், மாலை 4 மணி அளவில் தாராபுரம் - காங்கயம் சாலையில் ஊதியூரை அடுத்த நொச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த 5 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக தாராபுரத்திக்கு நல்லதங்காள் ஓடை திறந்து விடும் நிகழ்ச்சிக்காக சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அமைச்சர் மற்றும் கலெக்டர் உடனடியாக தங்களது காரை நிறுத்தி கீழே இறங்கி சென்று காயங்களுடன் இருந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிரகாஷ் மற்றும் கவுதம் ஆகிய 2 பேரும் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 3 பேருக்கும் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நோக்கில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.