காங்கயத்தில் 3 ஆண்டுகளாக பிரிந்திருந்த தம்பதியை சேர்த்து வைத்த ‘லோக் அதாலத்’

Tirupur News,Tirupur News Today- காங்கயத்தில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில், 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி, இணைந்து வாழ சம்மதம் தெரிவித்தனர்.

Update: 2023-06-10 17:19 GMT

Tirupur News,Tirupur News Today- காங்கயத்தில் இன்று நடந்த சிறப்பு நீதிமன்றத்தில், இணைந்து வாழ நீதிபதிகள் முன்னிலையில் சம்மதம் தெரிவித்த தம்பதி. 

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் கருத்துவேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி நீதிபதி முன்னிலையில் இணைந்து வாழ சம்மதித்தனர்.

காங்கயம் வட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மூலம் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது. 

காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் பங்கேற்றனர். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் என மொத்தம் 17 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 14 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதில் ரூ.59 லட்சத்து 9 ஆயிரத்து 140 மதிப்புக்கு தீர்வு காணப்பட்டது.

காங்கயம் கல்லேரி பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது37). இவரது மனைவி யசோதா தேவி (31). இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்த விவாகரத்து வழக்கானது நடந்து வந்தது. இந்நிலையில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம், இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்தனர். இதையடுத்து நீதிபதிகள் முன்னிலையில் தம்பதி இருவரும் இணைந்து வாழ ஒப்புதல் அளித்தனர்.

வழக்கமாக, இதுபோன்ற லோக் அதாலத் சிறப்பு மன்றங்களில் வாகன விபத்து வழக்குகள், செக் வழக்குகள், சொத்து வழக்குகளில் தான் சமரச தீர்வு ஏற்படும். லட்சக்கணக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தருவது வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால், காங்கயத்தில் நடந்த இந்நிகழ்வில், பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி, அவர்களது விவாகரத்து வழக்கு நடந்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தது, இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News