விளைநிலத்தில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை கைவிட காங்கயம் விவசாயிகள் கோரிக்கை
Tirupur News- காங்கயம் அருகே விளைநிலத்தில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகே விளைநிலத்தில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பாஜக திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் விசாகன் தலைமையில் வேலம்பாளையம் மற்றும் சின்னமுத்தூா் கிராம விவசாயிகள், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது,
கோவையில் இருந்து கா்நாடக மாநிலம் தேவனக்கொத்தி வரை சாலை வழியாக அமைக்கப்படவுள்ள எண்ணெய் குழாய், காங்கயம் வட்டத்துக்குள்பட்ட வெள்ளக்கோவிலில் இருந்து முத்தூா் வழியாக கொண்டு செல்லவுள்ளனா். இதில், முத்தூா் நகருக்குள் செல்லாமல் கரையூா் பகுதிக்கு அருகே விளைநிலங்கள் வழியாக கொண்டுசென்று கொடுமுடி சாலையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளனா்.
இதனால், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. விளைநிலங்கள் பாதிக்காத வகையில் இத்திட்டத்தை நிறைவேற்ற முத்தூருக்கு தென்பக்கம் கரையூா் வழியாக செல்லும் ஓடையில் போதுமான புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த வழியாக குழாய் அமைத்தால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
மேலும், ஐடிபிஎல் திட்டத்தின் திட்ட தலைமை அதிகாரி கலந்துகொண்ட கள ஆய்விலும் இத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். எனவே, விவசாயிகளைப் பாதிக்காத வகையில் மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.