நடனமாடி கொரோனா விழிப்புணர்வு - காங்கயம் போலீசார் அசத்தல்

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், போலீசார் நடனமாடி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.;

Update: 2021-05-29 07:46 GMT

காங்கயத்தில், போலீசார் நடனமாடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 500 க்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தவிர, பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும், கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கொரோனா சென்டர் அமைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்த போதிலும், சில நாட்களாக ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக அனுமதியின்றி வெளியில் சுற்றும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, காவல்துறையினரும் பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு, கொரோனா விழிப்புனர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், காங்கயம் போலீசாரோ, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு சாலையில் நடனமாடி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். போலீசாரின் இந்த நூதன விழிப்புணர்வை, பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

Tags:    

Similar News