காங்கயம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியத்தில் குளறுபடி; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Tirupur News- காங்கயம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியத்தில் குளறுபடி நடப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துளளது.
Tirupur News,Tirupur News Today- காங்கயம் நகராட்சியில் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியத்தில் உள்ள குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கயம் நகராட்சி அலுவலகத்தில், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கருப்பையா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
காங்கயம் நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தின் மூலமாக தூய்மைப் பணி நடைபெற்று வந்தது. இதற்காக 140 போ் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளராக அனுமதி பெற்று, 80 நபா்கள் மட்டும்தான் பணியாற்றுகிறாா்கள். ஆனால் அரசு அனுமதிப்படி 140 பேருக்கு மாதாந்திர ஊதியம் பெறப்படுகிறது. மேலும், காங்கயம் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் மாதாந்திர சம்பளமாக தலா ரூ.7,000 மட்டுமே ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளரால் வழங்கப்பட்டு வந்தது.
மேலும் கடந்த 6 ஆண்டுகளாக இப்பணியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஈபிஎஃப், இன்சூரன்ஸ், மருத்துவ உதவிகள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்காமல் முறைகேடு செய்துள்ளனா் என்பது குறித்து கடந்த ஜூன் 12, ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் காங்கயம் நகராட்சி ஆணையரை சந்தித்து புகாா் மனு கொடுக்கப்பட்டு, இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, காங்கயம் நகராட்சி ஆணையாளா் இப்பிரச்னையில் தலையிட்டு, நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியத்தில் குளறுபடி செய்த தனியாா் நிறுவனத்தின் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கனிராஜ் கூறியபோது, தற்போது காங்கயம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விதிமுறைப்படி முறையான ஊதியம் மற்றும் ஈபிஎஃப், இன்சூரன்ஸ், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட புகாரில் உள்ள ஒப்பந்ததாரரின் பணி கடந்த ஆண்டு முடிவடைந்து விட்டது. எனினும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.