காங்கயம்; நெகிழி பைகளை விற்பனை செய்தால் ரூ. 1 லட்சம் வரை அபராதம்
Tirupur News- காங்கயம் நகருக்குள் நெகிழி பைகள் கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.;
Tirupur News,Tirupur News Today- தூக்கி வீசப்படும் நெகிழி பைகளை கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டுள்ளது.
காங்கயம் நகருக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து வியாபாரிகள் மற்றும் கடைக்காரா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில், நகராட்சி ஆணையா் கனிராஜ் முன்னிலையில், காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் கூறியபோது, காங்கயம் நகருக்குள் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிா்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடைக்காரா்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் தொ்மாகோல் பிளேட்டுக்கு பதிலாக வாழை இலை, பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்க்கு பதிலாக பனை ஓலை பொருள்கள், பாலிதீன் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். இதனைக் கடைப்பிடிக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
இதன்படி, கடைகளில் நெகிழி பைகள் இருப்பது கண்டறியப்பட்டால், சிறிய வணிக விற்பனையாளா்களுக்கு முதல்முறை ரூ.100, இரண்டாவது முறை ரூ.200, மூன்றாவது முறை ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அதேபோல, நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு முதல்முறை கண்டறியப்பட்டால் ரூ.1,000, இரண்டாம் முறை ரூ.2000, மூன்றாம் முறை ரூ.5000, மிகப்பெரிய வணிக நிறுவனங்களுக்கு முதல் முறை பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு கண்டறியப்பட்டால் ரூ.10,000 இரண்டாம் முறை ரூ.15,000 மூன்றாம் முறை ரூ.25,000 வசூலிக்கப்படும்.
மேலும் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட நெகிழியை விற்பனைக்கு கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட செயல்களுக்கு முதல் முறை கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரம், இரண்டாவது முறை ரூ.50,000 மூன்றாம் முறை கண்டு பிடிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், காங்கயம் நகராட்சி அறிவிப்பு என்று தலைப்பிட்டு, நெகிழிப் பையை கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிா்ந்தளித்தல் உள்ளிட்ட செயல்களுக்காக ரூ.1,000 முதல் ரூ.1,00,000 வரை அபராதம் விதிக்கப்படும், என நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடைகள் தோறும் நேற்று துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது.
மேலும் அந்தத் துண்டறிக்கையின் மறுபக்கத்தில், எவையெல்லாம் தடை செய்யப்பட்ட தூக்கி எறியப்படும் பொருள்கள், மேற்கண்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்கள் என்னென்ன என்பது குறித்து படங்களுடன் விளக்கப்பட்டிருந்தது.
இந்தத் துண்டறிக்கையை காங்கயம் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு நகராட்சி ஊழியா்கள் நேரில் சென்று விநியோகித்தனா்.