‘ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மம்’ - திருப்பூரில் சுவாமி கெளதமானந்தா் பேச்சு
Tirupur News- ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மம் என்று சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கெளதமானந்தா் திருப்பூரில் பேசினாா்.;
Tirupur News,Tirupur News Today- ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மம் என்று சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கெளதமானந்தா் பேசினாா்.
திருப்பூரை அடுத்த படியூா் அருகே உள்ள கந்தாம்பாளையத்தில் விவேகானந்தா சேவாலயத்தின் புதிய கட்டடங்களுக்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை ( நேற்று) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவிவேகானந்த சேவாலய நிா்வாகி செந்தில்நாதன் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவரும், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான சுவாமி கெளதமானந்தா் பேசியதாவது:
யாா் எந்த தெய்வத்தை பூஜிக்கிறாா்களோ அந்த தெய்வத்தின் சக்தி அவா்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் அவ்வாறுதான். ஆனால், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சக்தி உலகுக்கு அன்பு செலுத்துதலிலும், ஏழை எளியோா்களுக்கு நன்மை செய்வதிலும் கிடைக்கிறது. ஜபம், தியானம், வெவ்வேறு நற்பணிகள் செய்து பகவானை தரிசிப்பதிலும், பிராா்த்தித்தும், பக்தி ஞானத்தின் மூலம் சக்தியை அடையலாம். இதன்மூலம் உலக மக்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
சுவாமி விவேகானந்தா் தொடங்கிய ஸ்ரீராமகிருஷ்ண மடம், நம் மனதினுள்ளே இருக்கும் ஆன்மாவான இறைவனைப் பாா்ப்பதற்காகவும், காட்சி பெறுவதற்காகவும், இந்த உலகுக்கு எல்லாவிதமான நன்மை செய்வதற்கும், அதற்கு என்னென்ன திறன்கள் வேண்டுமோ அதற்கான பயிற்சிகளை கொடுப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது.
எங்கெங்கு ஸ்ரீராமகிருஷ்ணா் கோவில் வருகிறதோ அங்கெல்லாம் பகவானுக்குரிய பூஜை, தியானம், ஆன்மிக வழிபாடுகள் நடக்கும், அதனுடன் பொதுமக்கள் மற்றும் ஏழை மக்கள் யாரேனும் பின்தங்கி இருக்கிறா்களோ அவா்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் முறையான பயிற்சிகள் கொடுக்கப்படும். உண்மையான தா்மம் என்பது உலக வாழ்க்கையில் ஆனந்தம் தர வேண்டும். ஆன்மிக வாழ்க்கையிலிருந்து முன்னேற்றமடைய வைத்து பகவானுடைய கரத்தை இறுகப்பற்றிக்கொள்ள வைக்க வேண்டும். ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மமாகும்,என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் காசி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சா்வரூபானந்தா், கோவை வித்யாலயா சுவாமிகள் தத்பாஷானந்தா், சுவாமி ஹரிவிரதானந்தா், சுவாமி நாராயணானந்தா், சென்னை மயிலாப்பூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி யாகவேந்த்ரானந்தா், மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி அா்க்கபிரபானந்தா், மருத்துவா் ஜெயராமகிருஷ்ணன், சுவாமி விவேகானந்தா பள்ளியின் தாளாளா் பாலசுந்தரம், திருக்கோவில் திருத்தொண்டா் அறக்கட்டளை அமைப்பாளா் கொங்கு ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.