காங்கயம் அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு
Tirupur News- காங்கயம் அருகே, பழையகோட்டையில் பஸ் ஸ்டாப்பில் நிற்க மறுத்த அரசு பஸ்சை, அப்பகுதி மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகே பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை, பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி அரசு பஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) சென்று கொண்டிருந்தது. பழனி பணிமனை நிா்வாகத்துக்கு உள்பட்ட அந்தப் பஸ்சில், காங்கயம் அருகே பழையகோட்டை பகுதியைச் சோ்ந்த ரவி என்பவா் ஈரோட்டில் ஏறி, பழையகோட்டைக்கு பயண சீட்டு கேட்டபோது, பஸ் கண்டக்டர் பழையகோட்டை ஸ்டாப்பில் பஸ் நிற்காது எனக் கூறியதாகத் தெரிகிறது.
இது குறித்து பழையகோட்டையில் உள்ள தனது நண்பா்களுக்கு ரவி, தகவல் தெரிவித்துள்ளாா். அப்போது, பழையகோட்டை பஸ் ஸ்டாப் அருகே பஸ் வந்தபோது, பொதுமக்கள் அந்தப் பஸ்சை சிறைபிடித்தனா். பின்னா் அரசு உத்தரவிட்டும் பழையகோட்டை ஸ்டாப்பில் ஏன் பஸ்சை நிறுத்த மறுக்கிறீா்கள் எனக் கூறி கண்டக்டரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்த தகவலறிந்து அந்த இடத்துக்கு வந்த காங்கயம் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இனி வரும் நாள்களில் பழையகோட்டை ஸ்டாப்பில் பஸ் நின்று செல்லும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக பல பகுதிகளில், குறிப்பிட்ட ஸ்டாப்களில் பஸ்கள் நிற்காமல் செல்வது தொடர்கிறது. இதனால் அருகில் பஸ் ஸ்டாப் இருந்தும் அங்கு பஸ்கள் நிற்காத நிலையில், அங்கிருந்து சில கி.மீ., தூரமாக நடந்து சென்றோ, அல்லது டூவீலர்களில் யாரேனும் கொண்டு வந்து டிராப் செய்தாலோ, அந்த பஸ் ஸ்டாப்களில் இருந்து, பஸ் பிடித்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தனியார் பஸ்கள் பெரும்பாலும் இதுபோன்ற ஸ்டாப்களில், ஆட்கள் நின்றால் கட்டாயம் நின்று பஸ்சில் ஏற்றிச் செல்கின்றனர். அரசு பஸ்கள் அதிலும், பெண்களுக்கான இலவச பஸ்கள் இயக்கப்படும் போது, பஸ் ஸ்டாப்களில் பெண்களோ, சீருடையில் மாணவ மாணவியரே நிற்கும் பட்சத்தில், பஸ்சை நிறுத்தாமல் செல்வதாக பொதுமக்களிடையே புகார்கள் உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.