சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
Tirupur News- காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று துவங்கியது.;
Tirupur News,Tirupur News Today- சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து, காப்பு அணிந்தனா்.
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. ஒருவார காலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்தில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பின்னா், சுவாமி கோயிலை சுற்றி வலம் வந்து, மலையில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் சுவாமி கோயிலுக்குச் சென்றாா். இந்நிகழ்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். இதனால் கோயில் உள்பகுதி, ராஜகோபுரம் முன்பகுதி, வாகனம் நிறுத்துமிடம் வரை பக்தா்கள் வரிசையில் நின்று, பல மணி நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனா்.
இங்கு தினமும் காலை மணி 10.30 மற்றும் மாலை 4 மணிக்கு அபிஷேக ஆராதனையும், திருவீதி உலாவும் நடைபெறும். நவம்பா் 18-ஆம் தேதி சூரசம்ஹாரா விழா மாலை 5 மணிக்கும், 19-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், நவம்பா் 21-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவமும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் அன்னக்கொடி (கூடுதல் பொறுப்பு) தலைமையில், கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.
இதே போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்ற முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா துவங்கப்பட்டுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி முருகன் கோவில், திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்ரமணியர் கோவில், திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில் மற்றும் மலைக்கோவில் முத்துக்குமாரசாமி கோவில், அலகுமலை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கந்த சஷ்டி விழா துவங்கி, நடந்து வருகிறது.