முத்தூரில் வாழைத்தார் விற்பனை ஏலம் தொடங்க விவசாயிகள் கோரிக்கை
Tirupur News,Tirupur News Today- முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாழைத்தார் விற்பனை ஏலம் தொடங்க வேண்டும் என்று, விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- முத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிக பிரதானமாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு ஆண்டு தோறும் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் மஞ்சள், கரும்பு, வாழை, நஞ்சை சம்பா நெல், எண்ணெய் வித்து பயிர்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம், மரவள்ளி ஆகியவையும் மற்றும் காய்கறிகள், கீரை வகைகளையும் சாகுபடி செய்து பலன் அடைந்து வருகின்றனர்.
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், கொப்பரை தேங்காய், எள் ஆகிய 3 வேளாண் விளை பொருட்களின் ஏலம் மட்டுமே நடந்து வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் கொல்லங்கோவில், சிவகிரி, கொடுமுடி பேரூராட்சி, அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் அறுவடை முடிந்த பின் நெல் மணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தொடங்கப்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்திற்கு கொண்டு சென்று விற்று பலன் அடைகின்றனர். மேலும் எண்ணெய்வித்து பயிர்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களை அறுவடை பணிகள் முடிந்த பின்பு முத்தூர், வெள்ளகோவில், சிவகிரி, அவல் பூந்துறை ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு சென்று கிலோ அளவிற்கு விலை நிர்ணயம் செய்து விற்கின்றனர்.
இதன்படி இப்பகுதி விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருட்களான எள், தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேரில் கொண்டு வந்து எவ்வித இடைத்தரகும் இன்றி டெண்டர் முறையிலான ஏலத்தில் விற்கின்றனர்.
இந்நிலையில் முத்தூர் சுற்றுவட்டார கிராம கீழ் பவானி பாசன பகுதிகளில் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீரினை பயன்படுத்தி பருவகால சூழ்நிலைக்கு ஏற்ப இப்பகுதி விவசாயிகள், ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வாழை சாகுபடி செய்து வாழைமரம், வாழை இலை, வாழைத்தார், வாழைக்காய் ஆகியவற்றின் மூலம் பலன் அடைகின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வாழைத்தார்களுக்கான ஏலம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி வாழை சாகுபடி விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை பணியாக வெட்டி எடுத்த பின்பு மொத்தமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய வெளி மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு இதர மாவட்ட மொத்த கொள்முதல் வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதி வாழை சாகுபடி விவசாயிகள் வாழைத்தார்களை நேரடியாக விற்பனை செய்ய முடியவில்லை.
மேலும் வாழை சாகுபடி விவசாயிகள் ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் நடக்கும் வாழைத்தார் விற்பனை ஏலத்திற்கு நேரில் கொண்டு சென்று கலந்து கொண்டு விற்கின்றனர். இதனால் இப்பகுதி வாழை சாகுபடி விவசாயிகளுக்கு கூடுதல் நேரமும், கூடுதல் போக்குவரத்து செலவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாழைத்தார்கள் சாகுபடியில் முதலீட்டுக்கு ஏற்ற போதிய லாப தொகையை பெறுவதில் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட வேளாண் விற்பனை துறை மூலம் உடனடியாக முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாழைத்தார் விற்பனை டெண்டர் முறையிலான ஏலத்தை தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி வாழை சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.