வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிா்ப்பு
Tirupur News-வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tirupur News,Tirupur News Today- வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கயத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்தாா். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறியதாவது: வெள்ளகோவில் ஒன்றியப் பகுதியில் 14 ஏக்கா் பிஏபி ஆயக்கட்டு பாசன விவசாய நிலத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
திருப்பூா்-கரூா் மாவட்ட எல்லைப் பகுதிகள், கரூா் மாவட்டம் தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை இப்பகுதியில் அமைக்கப்படும் துணை மின் நிலையம் மூலம் ஒருங்கிணைத்து இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மூலனூா் பகுதிக்கு விவசாய நிலங்கள் வழியாக உயா் மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிா்த்து இப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என்றனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டாா். இதில் மேற்கண்ட தனியாா் நிறுவனம் அனைத்து அரசுத் துறைகளிலும் உரிய அனுமதி பெறாமல், துணை மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாது என உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்தப் போராட்டத்தில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம், பிஏபி வெள்ளகோவில்-காங்கேயம் கிளை கால்வாய் பாதுகாப்புச் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.