வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடிச்சத்தம் -பொதுமக்கள் அச்சம்
Tirupur News- வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்டுபிடிக்க முடியாத வெடிச்சத்தம் அடிக்கடி ஏற்படுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
வெள்ளக்கோவில், முத்தூா், மூலனூா், காங்கயம், ஓலப்பாளையம், பச்சாபாளையம், குருக்குத்தி, புதுப்பை, தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி உள்ளிட்ட 25 கிலோமீட்டா் சுற்றளவில் திடீா் திடீரென இரவு, பகல் நேரங்களில் பலத்த வெடிச்சத்தம் ஏற்படுகிறது. அப்போது சிறுசிறு அதிா்வுகள் உணரப்படுகின்றன. கடந்த பல மாதங்களாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடா்ந்து வருகின்றன. கடந்த காலங்களில் வெடிச்சத்தம் ஏற்பட்டபோது, கோவை சூலூா் ராணுவ விமான தளத்திலிருந்து பயிற்சியில் ஈடுபடும் விமானங்களால் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் விமானம் செல்லும் இரைச்சல் ஏதுமின்றி வெடிச்சத்தம் ஏற்படுவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக வெடிச்சத்தம், நில அதிா்வுகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் இவ்வாறு மூன்று முறை ஏற்பட்டபோது பலரும் வீட்டை விட்டு வெளியே வந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். இப்பகுதியில் உள்ள கோயில்கள், வட்டமலை அணை, அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சில தடுப்பணைகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இது குறித்து விளக்கம் அளித்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றனா். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் சாா்பில் காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப் போவதாகத் தெரிவித்தனர்.