வெள்ளக்கோவிலில் வயதான தம்பதியை மிரட்டி 41 பவுன் நகைகள் திருட்டு; முகமூடி நபர்கள் கைவரிசை
Tirupur News- வெள்ளக்கோவிலில் வயதான தம்பதியை மிரட்டி 41 பவுன் நகைகள் திருடிச் சென்ற முகமூடி மா்ம நபா்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனா்.
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை மிரட்டி 41 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற முகமூடி அணிந்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வெள்ளக்கோவிலை அடுத்த சோ்வகாரன்பாளையம் வேட்டைக்கார சுவாமி கோயில் அருகே சங்கராயி தோட்டத்தைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியம் (47), விவசாயி. இவருடைய மனைவி ஈஸ்வரி (38). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். சிவசுப்பிரமணியத்தின் தந்தை பழனிசாமி (85), தாயாா் முத்தம்மாள் (80) ஆகியோரும் இவா்களுடன் வசித்து வருகின்றனா்.
சிவசுப்பிரமணியம் தனது மனைவி, குழந்தைகளுடன் உறவினா் வீட்டுத் திருமணத்துக்கு புதன்கிழமை மாலை சென்று விட்டாா். வீட்டில் பெற்றோா் மட்டும் தனியாக இருந்தனா். இரவு 8 மணிக்கு முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த ஐந்து போ் இருவரையும் மிரட்டி பீரோவில் இருந்த 41 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரம், இரண்டு கைப்பேசிகளை திருடிக் கொண்டு வாகனங்களில் தப்பிச் சென்றனா்.
இரவு வீட்டுக்கு வந்த சிவசுப்பிரமணியம் இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளக்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தாா். காவல் ஆய்வாளா் ரமாதேவி மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வெள்ளக்கோவில் போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.