‘சாக்குப்பைகளில் திறந்து வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்காதீங்க’ - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Tirupur News. Tirupur News Today- சாக்குப்பைகளில் திறந்து வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது என்று, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-05-25 14:39 GMT

Tirupur News. Tirupur News Today- சாக்குப்பைகளில் திறந்து வைத்து விற்கப்படும் விதைகளை வாங்க வேண்டாம் என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் சாக்குப்பைகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் வாங்கக்கூடாது என்று ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் பி.சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் வழியாக ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் எண்ணெய் வித்து மற்றும் நஞ்சை சம்பா நெல் பயிர் சாகுபடிக்கு தொடர், முறை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசன விவசாயிகள் தற்போது கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றின் நீரினை பயன்படுத்தி பயிறு வகைகள், சோளம் வகைகள், காய்கறிகள் சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, விதை ஆய்வு துறை மூலம் முறையாக அனுமதி பெற்று பல்வேறு விதைகளை விற்பனை செய்து வரும் விதை விற்பனை நிலையங்கள் கீழ்கண்ட விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதன்படி அனைத்து வகையான விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளுக்கு முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும்.

விற்பனை நிலையங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். விதை விற்பனை நிலையங்கள் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து அனைத்து விதைகளின் பல்வேறு ரகங்கள், இருப்பு நிலை, விலை பட்டியல் விவரம் ஆகியவற்றை தெளிவாக எழுதி வைக்க வேண்டும். அனைத்து விதைகளுக்கும் சரியான விலை பட்டியல் வழங்க வேண்டும். விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும் போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். இதில் வாங்கும் விதை குவியலின் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரி பார்த்து வாங்க வேண்டும்.

இதுபோன்ற அரசு விதிமுறைகளை இப்பகுதி விதை விற்பனை நிலையஙகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம். சில தானிய மண்டிகளில் திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் கட்டாயம் வாங்கக்கூடாது. இப்பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை மூலம் விதைகள் சட்டம் 1966-ன் படி கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News