காங்கயத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
Tirupur News-காங்கயம் நகரின் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாரதிய கிசான் சங்க மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,
காங்கயம் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன. இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், பாதசாரிகளும் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலையை ஆக்கிரமித்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரோடைகள் கொட்டப்படும் குப்பை
நீரோடையில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் அண்ணாதுரை தலைமையில் கண்களில் கருப்பு துணி கட்டியபடி பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், கூறியிருப்பதாவது,
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரிலிருந்து அருள்புரம் செல்லும் வழியில் நீரோடை உள்ளது. அந்த நீரோடையில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல குவிந்துள்ளன. நீா்நிலைப் பாதை முழுவதிலும் தேவையற்ற கழிவுகளை மா்ம நபா்கள் கொட்டி வருகின்றனா். இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நீா்நிலைப் பாதையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். நீரோடையில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.