காங்கயத்தில் வரும் 27ல் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்
Tirupur News- காங்கயத்தில் வரும் 27ம் தேதி, ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் நடக்கிறது.
Tirupur News,Tirupur News Today- காங்கயம் நகராட்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் புதன்கிழமை (டிசம்பா் 27) நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் டிச.18 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கப்பட்டது.
“மக்களுடன் முதல்வர்“’ என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக வரும் டிச.18-ம் தேதி முதல் ஜன.6 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து ஜன.31 வரை “மக்களுடன் முதல்வர்” திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடக்க உள்ளது.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட வாா்டு எண் 13, 14, 15, 16, 17, 18 ஆகிய பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் காங்கயம் நகரம், கரூா் சாலையில் உள்ள சிவாலயா மண்டபத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
நகராட்சித் துறை, வருவாய்த் துறை, மின்சாரத் துறை, காவல் துறை, மாற்றுத் திறனாளிகள், சமூக நலத் துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள கோரிக்கைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு இந்த முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில், பங்கேற்ற விரும்பும் பொதுமக்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்கள், நகல்களை கொண்டுவர வேண்டும்.
மேலும், தங்களது கோரிக்கைகளை துறைவாரியாக தனித்தனி மனுக்களாக எழுதி சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி தீா்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.