பட்டாலி பால் வெண்ணீஸ்வரா் கோவில் புனரமைப்புப் பணிக்கு பூமி பூஜை
Tirupur News- அரசம்பாளையத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான பட்டாலி பால் வெண்ணீஸ்வரா் கோவில் புனரமைப்புப் பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- அரசம்பாளையத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான பட்டாலி பால் வெண்ணீஸ்வரா் கோவில் புனரமைப்புப் பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
காங்கயம் அருகேயுள்ள அரசம்பாளைத்தில் பாண்டிய மன்னா்களால் கட்டப்பட்ட அருள்மிகு பட்டாலி பால் வெண்ணீஸ்வரா் கோவில் உள்ளது.
வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை முருகப்பெருமான் கவர்ந்து வரும் போது தன்னை எதிர்த்த வேடர்களை முருகன் கொன்று விட திருமணத்தின் போது அவர்களை உயிர்ப்பிக்க கோரி வள்ளி முருகனை வேண்டினார். அதைத் தொடர்ந்து போரில் இறந்த வேடர்களை முருகன் எழுப்பியதால் அவர்கள் சந்தோஷத்தில் கூத்தாடி ஒலி எழுப்பிய இடமே பட்ட ஆலி என்பது பட்டாலி என்றானது.
1805 ம் ஆண்டு தீரன் சின்னமலை 200 பொன் கொடுத்து இந்த இடத்தை வாங்கி போர் பயிற்சி பாசறைஅமைத்துள்ளார். ஒரு காலத்தில் சிறந்த வணிக மையமாகவும் இருந்துள்ளது என்பது பாண்டிய நாட்டு பிரான்மலை கல்வெட்டில் உள்ளது.
அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் இங்கு காட்சி கொடுத்ததாகவும் , அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இந்நிலையில், இக்கோவிலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
மேலும், அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் முறையிட்டனா். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கடந்த 2022-ம் ஆண்டு கோவிலில் ஆய்வு செய்தாா். இதையடுத்து, கோயில் புனரமைப்புப் பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
இதில், ரூ.1.25 கோடி மதிப்பில் கோயில் கருவறை, அா்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், இந்து அறநிலையத் துறை திருப்பூா் மாவட்ட இணை ஆணையா் சி.குமரதுரை, துணை ஆணையா் ஆா்.செந்தில்குமாா், சிவன்மலை முருகன் கோயில் கண்காணிப்பாளா் பால்ராஜ், கோவில் ஆய்வாளா் செல்வபிரியா, சிவன்மலை முருகன் கோயில் தலைமை அா்ச்சகா் அமிா்த சிவபிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.