தேவையான வேளாண் இடுபொருட்கள் இருப்பு; வேளாண் துறை அலுவலர் தகவல்
Tirupur News,Tirupur News Today- நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளத் தேவையான வேளாண் இடுபொருட்கள் நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- இதுகுறித்து, காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நத்தக்காடையூர், முள்ளிப்புரம், மருதுறை, பழையகோட்டை, குட்டப்பாளையம், பரஞ்சேர்வழி ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதிகளில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாதாரண மற்றும் ஒற்றை நாற்று என்னும் திருந்திய நெல் நஞ்சை சம்பா சாகுபடி பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன விவசாயிகள் தற்போது நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி 120 நாள் முதல் 130 நாள் வயதுடைய மத்திய கால ரகமான ஐ.ஆர்-20 ரக நெல், 105 நாள் வயதுடைய குறுகிய கால கோ.ஆர்-51 ரக நெல், தூயமல்லி ரக நெல் ஆகிய விதை நெல்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ரக விதை நெல்கள் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட மானியம் வழங்கப்பட உள்ளது. இத்துடன் நெல்லுக்கு விதை நேர்த்தி செய்ய தேவையான உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்டம் ஆகியவையும் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. தென்னைக்கு நுண்ணூட்டம், கரும்பு நுண்ணூட்டம், பயிறு வகை நுண்ணூட்டம் மற்றும் சிறுதானிய நுண்ணூட்ட உரங்கள் ஆகியவைகள் தற்போது தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே நத்தக்காடையூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன வேளாண் விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு ஏற்ற விதை நெல், நுண்ணுயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் ஆகியவைகளை மானிய விலையில் பெற்று பயனடைவதற்கு நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் அணுகலாம்..
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.