சிவன்மலை கோவிலில், 10 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நிறுத்தம்
Tirupur News-நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு சிவன்மலை கோவிலின் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு முருகப் பெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலின் தனிச்சிறப்பாக உத்தரவு பெட்டி என்று ஒன்று உள்ளது. அந்த உத்தரவு பெட்டிக்குள் எந்த பொருள் வைக்க வேண்டும் என பக்தர்கள் கனவில் வந்து முருகப் பெருமானே கட்டளையிடுவதாக கூறுகின்றனர்.
அந்த பொருள் சமுதாயத்தில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோவிலில் கடவுள் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி இருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இறுதியில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு கோவிலின் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும்.
அதே போல் இந்த வருடமும் நாளை (15-ம் தேதி) முதல் 24-ம் தேதி வரை 10 நாட்களுக்கு தங்கத்தேரானது நிறுத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன்மலை முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவன்மலை என்பதால், கோவிலுக்கு முதன்முறையாக வரும் பலரும் இந்த கோவிலை ஈஸ்வரன் கோவில் எனக் கருதுவது உண்டு. ஆனால், சிவன்மலையில் சுப்பிரமணிய சுவாமியாக, முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு மலைக்கு செல்ல மலைப்பாதை வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே வேளையில் படிக்கட்டுகள் வழியாக சென்றும், இறைவனை தரிசிக்கலாம்.
ஆனால், மிக செங்குத்தான படிப்பாதை வழியாக செல்ல இயலாத பக்தர்கள் பலரும், பஸ்களில் பயணித்து மலைக்குச் சென்று முருகப் பெருமானை தரிசிப்பது வழக்கமாக உள்ளது. மேலும், இங்கு அன்னதான திட்டத்தின் கீழ் தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.