சமூக விரோதிகள் நடமாட்டம்; முள்வேலி மரங்களை அகற்ற முடிவு

சமூக விரோத நபர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் உள்ள முள்வேலி மரங்களை அகற்றுவது என, காங்கயத்தில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2022-09-21 15:01 GMT

காங்கயத்தில், ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.

அரசுத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அரங்கில்  நடந்தது. கூட்டத்திற்கு காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜீவிதா முன்னிலை வகித்தார்.

காங்கயம் பகுதியில்,  திருட்டு மற்றும் வழிப்பறி, கொலை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடக்கிறது. காங்கயம் ஒன்றியப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை தவிர, மற்ற இடங்கள் வெட்டவெளியாக .உள்ளது. காங்கயம் பகுதி வழியாகச் செல்லும் நொய்யல் ஆற்றங்கரையோரத்தில், முள்வேலி மரங்கள் அடங்கிய புதர்களை சமூக விரோதிகள் பதுங்குவதற்கும், சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தி வருவதாக, இப்பகுதி மக்கள் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதியாக நொய்யல் ஆறு இருப்பதால், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க காங்கயம் போலீசார் சென்றால், அவர்கள் ஆற்றைக்கடந்து அந்தப் பகுதிக்கு சென்று தப்புவதும், சென்னிமலை போலீசார் சென்றால், இந்தப் பகுதிக்கு குற்றவாளிகள் தப்பி வருவதும் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில் காங்கயம் ஒன்றியப்பகுதியில் கத்தாங்கண்ணி பகுதி முதல் பழையகோட்டை ஊராட்சி வரையிலான 12 கி.மீ. தூரத்திற்கு நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் உள்ள முள்வேலி புதர்கள் மற்றும் முள்வேலி மரங்களை தன்னார்வலர்களின் உதவியோடு அப்புறப்படுத்துவதற்கு காங்கயம் போலீசார் முன்வந்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வெட்டப்பட்ட முள்வேலி மரங்கள் பின்னர் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார் தெரிவித்தார்.

காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், சந்தேக நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளிலும் தலா 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தீர்மானிக்கப்பட்டது. பிரதம மந்திரியின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காங்கயம் ஒன்றியப் பகுதியில் பணி மேற்கொள்வதற்கான சாலைகளைத் தேர்ந்தெடுக்கும் பணியும் நடைபெற்றது

கூட்டத்தில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சித் துறைகளின் உதவிப்பொறியாளர் வசந்தாமணி, காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளர்கள் சரவணன், கோகுல், காங்கயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Similar News