ஊத்துக்குளி தாலுாகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; ரூ. 80 ஆயிரம் சிக்கியது
திருப்பூரை அடுத்துள்ள ஊத்துக்குளி தாலுாகா அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் தாலுாகா அலுவலகம் உள்ளது. தாசில்தாராக சைலஜா பணியாற்றி வருகிறார். இந்த தாலுாகா அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அனுப்பி வந்தனர்.
புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தட்சிணாமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் நேற்று மாலை 5 மணிக்கு ஊத்துக்குளி தாலுாகா அலுவலகத்திற்கு திடீரென்று வந்தனர். அப்போது அலுவலகத்தில் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் மற்றும் அலுவலர்கள் இருந்தனர். தாலுாகா அலுவலகத்திற்குள் நுழைந்ததும், அலுவலக கதவை பூட்டினார்கள். இதனால் உள்ளே இருந்து யாரும் வெளியே வரவும் இ்ல்லை. அலுவலகத்திற்குள் யாரும் செல்லவும் இல்லை.
பின்னர் அலுவலர்கள் அனைவரும் வெளியில் தொடர்பு கொள்ளாத வகையில்,அவர்களது மொபைல் போன்களை 'ஸ்விட்ச் ஆப்' செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர். அதை தொடர்ந்து, அலுவலர்கள் அனைவரும் தங்களது செல்போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்தனர். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பீரோக்களில் தேடினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 70 கைப்பற்றப்பட்டது. இந்த பணம் அங்கிருந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பீரோக்களில் இருந்து கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதனால் தாலுாகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு அலுவலகங்களில் உஷார்
தீபாவளி நெருங்கும் நாட்களில், அரசு துறை சார்ந்த அலுவலகங்களில், லஞ்ச பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். குறிப்பாக பத்திரப்பதிவு துறை, ஆர்.டி.ஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் சார்ந்த அலுவலகங்களில் கான்ட்ராக்டர்கள், அதிகாரிகளுக்கு தங்களது 'விசுவாசத்தை' காட்டுவது வழக்கம். ரொக்கமாக மட்டுமின்றி, நகையாக, வீட்டுக்கு தேவையான பொருளாக வாங்கிக்கொள்ளும் அதிகாரிகளும் உண்டு. அந்த வகையில், ஆண்டுதோறும் இதுபோன்ற தீபாவளி காலகட்டத்தில், அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்துவது வழக்கம். இதில் லஞ்ச பேர்வழி அதிகாரிகள் வசமாக சிக்கி கொள்வதுண்டு. லட்சக்கணக்கில் பணமும் கைபற்றப்படும்.
தமிழகத்தில் சில தினங்களாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வரும் நிலையில், அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள், ஊழியர்கள் உஷார் நிலையில் உள்ளனர். எந்த நேரத்திலும், தங்களது அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழையும் ஆபத்து உள்ளதால், லஞ்சம் பெறுவதை அலுவலக பகுதிக்குள் தவிர்க்க துவங்கி உள்ளனர். எனினும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், லஞ்ச புகாரில் சிக்கியுள்ள அரசு அலுவலகங்களில், மறைமுக கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.