சிவன்மலை கோவில் கிரிவலப்பாதையில் நாளை 8 கி.மீ., நடைப்பயிற்சி; 2 ஆயிரம் பேர் பங்கேற்க வாய்ப்பு
Tirupur News- காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை கோவில் கிரிவலப் பாதையில் நாளை காலை நடக்கும் நடைப் பயிற்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது.
Tirupur News,Tirupur News Today- பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான ஆரோக்கியமான பாதுகாப்பான நடைபாதை மாவட்டம் தோறும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் தமிழகம் முழுவதும் இன்று 4-ம் தேதி (சனிக்கிழமை) காலை தொடங்கப்பட உள்ளது. மேலும் மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நடைபயிற்சியை முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படவுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் சிவன்மலை முருகன் கோவில் கிரிவலப் பாதையில் இந்த 8 கி.மீ. தூர நடைபயிற்சி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் சிவன்மலை கிரிவலப்பாதையில் இரண்டு முறை சுற்றி வந்தால், 8 கி.மீ. தூரம் நிறைவு பெறும்.
இதனை முன்னிட்டு சிவன்மலை கிரிவலப்பாதை சுத்தப்படுத்தும் பணி மற்றும் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவன்மலை கிரிவலப் பாதையில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைபயிற்சியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நடைபயிற்சியில் திருப்பூர் மாவட்டப் பகுதியை சேர்ந்த 2 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயிற்சி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.