காங்கயம் நகராட்சியில் 16 டன் குப்பை அகற்றம்
Tirupur News- காங்கயம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில், ஆயுதபூஜையைத் தொடர்ந்து, 16 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பூர் சாலை, கடைவீதி, சென்னிமலை சாலை, கோவை சாலை, முத்தூர் சாலை பிரிவு உள்பட நகரின் பல இடங்களில் ஆயுதபூஜை பொருட்கள் விற்க திடீர் சாலையோரக் கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சுமார் 75 கடைகளில் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட வாழைக் கன்றுகள், மாவிலைகள், பூக்கள், தேங்காய், இளநீர் போன்ற ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்பட்டன.
இத்துடன் வாழைப்பழம், பொரி, சூடம், திருநீறு, சந்தனம் போன்ற பூஜைப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. யஇவற்றில் விற்பனையாகாமல் நின்று போன மாவிலைகள், வாழைக் கன்றுகளை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். இத்துடன் கடைகளிலிருந்து ஏராளமான இதர குப்பைகளும் குவிந்து கிடந்தது. தவிர ஆயுத பூஜைக்காக கடைகள், வணிக வளாகங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்த போது கிடைத்த உபயோகமற்ற பொருட்கள் ஆங்காங்கே குவிந்தது. பூஜை முடிந்த பின் இன்னும் அதிகமாக குப்பைகள் குவிந்தது.
வழக்கமாக காங்கயம் நகரில் நாள்தோறும் சுமார் 10 டன் வரை குப்பைகள் அகற்றப்படும். ஆனால் ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக குப்பைகள் சேர்ந்தது. இதனால் 16 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அகற்றப்படாத குப்பைகளை உரிய நேரத்தில் அகற்றுமாறு காங்கயம் நகராட்சி நிர்வாகத்துக்கு நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாலான வீடுகள் உள்ள பகுதிகளில் இன்னும் குப்பைகளை கொட்ட அதிக எண்ணிக்கையில், நகராட்சி சார்பில் கண்டெய்னர் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்பதும், காங்கயம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.