நிறுத்தப்பட்ட 108 சேவை... முத்தூரில் மீண்டும் துவக்கம்
திருப்பூர் மாவட்டம் முத்தூரில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி, கடந்த 2017 ஆம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த சேவை, கடந்த மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. சேவை நிறுத்தப்பட்டதால், 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளக்கோவில், 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காங்கயம் பகுதியில் இருந்துதான் 108 வர வேண்டிய நிலை இருந்தது.
இதனால் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செல்லும்போது சில நேரத்தில் உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தது. சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், தமிழக அமைச்சர் சாமிநாதனிடம் கடந்த 20 ம் தேதி கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையின் அடிப்படையில், முத்தூரில் 108 சேவையை துவங்க, சுகாதார துறையினருக்கு கலெக்டர் விஜய்கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில், முத்தூரில் 108 சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.