கூட்டுறவு வங்கியில் மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் நகை, வைர கம்மல் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

Update: 2023-03-31 12:37 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி ரோடு அசோக்நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 58). இவர் குண்டடத்தில் உள்ள ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா தாராபுரம் நிலவள வங்கியில் பணியாற்றி வருகிறார். மகன் சென்னையில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை செல்லமுத்து, கவிதா இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கிரில்கேட் மற்றும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் நகை, வைர கம்மல் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 3லட்சம் இருக்கும்.

செல்லமுத்து, கவிதா ஆகியோர் வேலைக்கு சென்றுள்ளதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், குற்றப்பிரிவு அன்புசெல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News