அவிநாசி பகுதியில் பலத்த காற்றுடன் மழை: வாழைகள் சேதம்
அவிநாசி பகுதியில் காற்றுடன் பெய்த கனமழையில் சுமார் 7 ஆயிரம் வாழை மரங்கள் சரிந்து சேதமானது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது. அவிநாசி சுற்று வட்டாரத்தில் சேவூர், வேட்டுவபாளையம், நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் பலத்த காற்று வீசியதால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. அவிநாசி சுற்று வட்டாரத்தில் மட்டும் 7000 வாழைமரங்கள் கீழே சாய்ந்து உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்தால் முட்டு கூலியோடு 60 முதல் 75 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தற்போது அடித்த பலத்த காற்றில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. இதற்கு அரசு இழப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.