அன்னுாரில் தீராத பிரச்னைகள்: அமைச்சரிடம் குவிந்த மனுக்கள்
அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுாரில் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், மக்கள் மனு வழங்கினர்.;
கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அன்னுாரில், பொது மக்களிடம் குறை கேட்டார். 'மக்கள் சபை' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், 400க்கும் அதிகமானவர்கள் மனு வழங்கினர்.
அன்னுாரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, கடந்த இரண்டு ஆண்டாக முடங்கிக் கிடக்கும், கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அன்னுார் பேரூராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறு கழிவுநீரை, குன்னத்துாரம்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்ல, நிலம் கையகப்படுத்தி, பணிகளை துவக்க வேண்டும். இட்டேரி சாலையில், கழிவுநீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு ஆறு ஆண்டுகளாக உள்ள நிலுவைத்தொகையை விரைவில் வழங்க வேண்டும். அன்னுார் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்பது உட்பட முதியோர் பென்ஷன், இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடு, சாலை, சாக்கடை வசதி, தொழில் கடன் சார்ந்தும் மனுக்கள் வழங்கப்பட்டன.