பயணிகள் அதிகரிப்பு: அவிநாசியில் இருந்து கூடுதல் பஸ் இயக்கலாமே
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், பலரும், தங்கள் ஊர் திரும்புவதால், அவினாசியில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.;
தீபாவளி முடிந்து ஊர் திரும்பிய மக்களால், அவினாசி பேருந்து நிறுத்தத்தில், கூட்டம் அதிகமாக இருந்தது.
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், பலரும் தங்கள் ஊர் திரும்பு தொடங்கியுள்ளனர். இதனால், பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள, தங்கள் உறவினர் வீடுகளுக்கு, தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூரை சேர்ந்த பலரும் வந்தனர். பண்டிகை முடிந்து, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கிவிட்டனர்.
இதனால் திருப்பூர், சேலம், ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம், சத்தி ஆகிய இடங்களின் சந்திப்பு பகுதியாக உள்ள அவினாசி பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. சில ஊர்களுக்கு பஸ்கள் குறைவாக இருந்ததால், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது; பலரும், படிகட்டில் தொங்கியபடி பயணித்தனர். போக்குவரத்து காவல் துறையினர் பயணிகளை, பேருந்தில் ஏற்றிவிட்டு, நெரிசலை சமாளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு தீர்வாக, நெரிசல் குறையும் வரை கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.