அவினாசியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணம்
அவினாசி பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டனர்.
அரசியலமைப்புச் சட்டத்தில், வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய சைக்கிள் பிரசார பயணம் செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட எல்லையான கருவலூர், ஆட்டையாம்பாளையம், முத்துச்செட்டிபாளையம், அவிநாசி சேவூர் சாலை, காசிகவுண்டன்புதூர், கருணைபாளையம் பிரிவு, வஞ்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
இப்பயணக்குழுவை வாழ்த்தி, கருவலூரில், வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் பாலசந்திர போஸ், திருப்பூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், கோவை மாவட்ட செயலாளர் கனகராஜ், மாநில குழு உறுப்பினர்கள் பாரதி, கற்பகம் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி வெங்கடாசலம், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட நிர்வாகி சண்முகம், சி.ஐ.டி.யு., விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் முத்துசாமி, மாவட்ட நிர்வாகிகள் பழனிச்சாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ஒன்றிய நிர்வாகி அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்