அ.தி.மு.க., அதிகாரபூர்வ வேட்பாளர் கட்சி சின்னம் துறந்து சுயேட்சையானார்!

அவினாசி பேரூராட்சியில், அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஒருவர், கட்சி சின்னத்தை உதறி, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

Update: 2022-02-08 16:15 GMT

மோகன்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சியில் அ.தி.மு.க., சார்பில், 18 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், ராயம்பாளையம் பகுதியை உள்ளடக்கிய 5வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் மோகன் என்பவருக்கு கட்சித்தலைமை சீட் வழங்கியது. இவர் கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று, அங்கு கவுன்சிலராக இருந்துள்ளார். அவரும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், 9,12 மற்றும், 17 ஆகிய வார்டுகளில், சுயேட்சைகளாக போட்டியிட்டவர்கள், மோகனின் ஆதரவாளர்களாக இருந்தனர். அந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்யுமாறு, கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் கூறினர். அதை மோகன் ஏற்கவில்லை.

இந்நிலையில், அவருக்கு கட்சியின் அங்கீகார சான்று மற்றும் கட்சி சின்னம் மறுக்கப்பட்டது. இதனால், அவர் சுயேட்சையாக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, வேட்பாளர் மோகன் கூறியதாவது;

நான் ராயம்பாளையம் வார்டில் கடந்த முறை தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் செல்வாக்கு எனக்குள்ளது. இந்த முறையும் 'சீட்' கேட்டிருந்தேன். அ.தி.மு.க., வுடன் பா.ஜ., கூட்டணியில் இருந்த போது, அந்த வார்டை பா.ஜ., வுக்கு ஒதுக்க, கட்சி பொறுப்பாளர்கள் திட்டமிட்டனர். என்னை ஓரங்கட்ட வேண்டும் என்பதே அவர்களது எண்ணம்.எனவே, அப்போதே சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து வாக்கு சேகரிக்க தொடங்கினேன். நான் சுயேட்சையாக தான் போட்டியிட போகிறேன் என்பதால், 9,12,15 வார்டுகளில் எனது ஆதரவு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அவர்களை வாபஸ் பெறச் செய்யுமாறு கூறினர். இதில் எனக்கு உடன்பாடு இல்லாததால், கட்சி சின்னத்தை வேண்டாம் எனக் கூறி, சுயேட்சையாக போட்டியிடுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையில் அவர் போட்டியிடும் ராயம்பாளையம் பகுதியில், பா.ஜ., வேட்பாளர் தினேஷ் குமார் என்பவரை ஆதரிக்க அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். இதை, மோகன் முறியடிப்பாரா? என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Tags:    

Similar News