வசூல் வேட்டை..? பெருமாநல்லூர் செளமியா மருத்துவமனைக்கு அனுமதி ரத்து..!
பெருமாநல்லூரில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததால், சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
பெருமாநல்லூரில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் கட்டணம் வசூலித்ததாகத் தனியார் மருத்துவமனை மீது அளிக்கப்பட்ட புகார் உறுதி செய்யப்பட்டதால், அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று ரத்து செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (62). இவருக்கு கடந்த. மே மாதம் 3 ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு,
ஒரு ரெம்டெசிவிர் மருந்து விலை ரூ.40 ஆயிரம் என , 5 ரெம்டெசிவிர் மருந்துக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
21 நாள் சிகிச்சைக்கு பிறகு, ஆக்சிஜன் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி, சுப்பிரமணியனை அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரை வேறு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் மாற்றிய நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி 25 ம் தேதி இறந்தார்.
இதற்கிடையில், முதலில் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை தரப்பில் ரசீது எதுவும் தராமல், ரூ.19 லட்சத்து 5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக, சுப்பிரமணியத்தின் மகன்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக மருத்துவமனை விளக்கம் அளிக்க மாவட்ட சுகாதார இணை இயக்குநர் உத்தரவிட்டார். மேலும் புகாரின் அடிப்படையிலும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படியும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாவட்ட இணை இயக்குநர் தலைமையில் பாக்கியலட்சுமி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக பெருமாநல்லூர் செளமியா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.