உலக மீனவர் தினவிழாவையாெட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள்: சபாநாயகர் வழங்கல்
மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மீன்பிடி குறைகால நிவாரண தொகையை ரூ.5,000/-ல் இருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தி வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் உலக மீனவர் தினவிழாவில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் வழங்கினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை மீனவ கிராமத்தில் ரோச் பிசப் மேல்நிலைப் பள்ளியில் உலக மீனவர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். புரதமிக்க உணவினை மக்களுக்கு அளிக்கும் மீன்வளம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், மீன்வள ஆதாரங்களை பேணி பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக, உலக மீன்வள மன்றம் (World Fisheries Forum) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21-ஆம் தேதி உலக மீனவர் தினமாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில் உலக மீனவர் தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் 1076 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் திருநெல்வேலி மாவட்டம் 48.90 கி.மீ கொண்டுள்ளது. 31,456 ஹெக்டேர் உள்நாட்டு நீராதாரங்களும் இம்மாவட்டத்தின் மீன்வளத்திற்கு வலுசேர்க்கும் ஆதாரங்களால் விளங்குகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் 7 கடல் மீனவ கிராமங்களிலும், 10 உள்நாட்டு மீனவ கிராமங்களிலும் சேர்த்து சுமார் 40,000 நபர்கள் மீன்வள ஆதாரங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள மீனவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பு வழங்குவதையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் உயர்த்தவும், கொள்கையாக தமிழ்நாடு அரசு கொண்டுள்ளது. அக்கொள்கைகளை ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு நமது மீனவர்களை ஊக்குவித்தல், உலகத்தரம் வாய்ந்த மீன்பிடி கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் இதர பல சமூகப் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் செயலாக்கம் செய்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மீனவர்களின் நலனில் அக்கறை கொண்ட இவ்வரசு மீன்வளத்துறையினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் மட்டும் செய்திடாமல், மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு முதல் மீன்பிடி குறைகால நிவாரணத் தொகையை ரூ.5,000/-ல் இருந்து உயர்த்தி ரூ.6,000/- ஆக உயர்த்தி வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 5,000 மீனவ குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், கடல்வளத்தைப் போற்றும் வகையிலும், மீனவ மக்களிடையே புத்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இடிந்தகரை மீனவ கிராமத்தில் மாணவர்களுக்கான இலக்கியத் திறன் போட்டி, இளைஞர்களுக்கான நீச்சல் போட்டி, இல்லத்தரசிகளுக்கான மீன் சார்ந்த சமையல் போட்டி மற்றும் கலைஞர்களுக்கான குறும்படப்பபோட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், கடல்சார் கல்விப் பயிலும் மீனவ இளைஞர்களுக்கு தலா ரூ.25,000/- வீதம் 2 மாணவர்களுக்கு ரூ.50,000/- மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் இயற்கை மரணமடைந்த மீனவரின் குடும்பத்திற்கு தலா ரூ.17,500/- வீதம் 6 நபர்களுக்கு ரூ.1.05 இலட்சம் நிவாரணத் தொகையினையும் வழங்கப்பட்டுள்ளது. 15 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவிதொகை, முதியோர் உதவிதொகை, மற்றும் மாற்றுதிறனாளிகள் விதவை உதவிதொகைக்கான ஆணைகளை, 10 மீனவர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் , சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஏ.த.மோகன்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஜான்சி ரூபா, பாஸ்கர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மௌலின், ஊராட்சி மன்ற தலைவர் சகாய ராஜ், அருட்பணி சதீஷ்குமார், மீனவ கூட்டுறவு சங்கத்தலைவர் சரோஜ்குமார், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தலைவர் செல்வி, மற்றும் அரசு அலுவலர்கள், அருட்தந்தையர்கள், தன்னார்வலர்கள், மீனவசங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.