பணகுடியில் பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோ: இளைஞர் கைது
பணகுடியில் பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பணக்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை பணகுடி வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் தவறான எண்ணத்துடன் கிண்டலடித்து வந்துள்ளார்.
கடந்த 20ம் தேதி அன்று அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்ற போது, அவர் சத்தம் போடவும் அவரை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். பின் அப்பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அப்பெண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றும், வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்த செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் மனு அளித்தார்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்குக்கு உத்தரவிட்டதன் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையிலான போலீசார் குற்றவாளியை தேடிவந்த நிலையில் நேற்று செல்வகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.