கூடங்குளத்தில் காரில் கடத்திவரப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தொடர் விடுமுறை வருவதால் 480 பாட்டில்களை காரில் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்;
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே காரிஸ் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது
கூடங்குளத்தில் தொடர்ந்து 6 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட இருப்பதால், இடிந்த கரையை சேர்ந்த வாலிபர் ஏராளமான மது பாட்டில்களை கடத்தி சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கூடங்குளம் அருகிலுள்ள இடிந்தகரையை சேர்ந்தவர் சந்தியாகு. இவரது மகன் பெனிஸ் (34).இவர் நேற்று இடிந்தகரையிலிருந்து உதயத்தூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு காந்தி ஜெயந்தி மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலை யொட்டி தொடர் விடுமுறையாக 6 நாட்கள் வருவதால் மொத்தமாக 480 மது பாட்டில்களை வாங்கி இடிந்த கரைக்கு தனது காரில் சென்றுள்ளார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கூடங்குளம் போலீசார், அவரை வழிமறித்து சோதனையில் ஈடுபட முயன்றபோது, அதற்கு பெனிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 480 மதுபாட்டில்கள் மொத்தமாக காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் ,விசாரணையில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்த மொத்தமாக பாட்டில்களை வாங்கி வந்ததாக பெனிஸ் கூறியதையடுத்து, அனைத்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர்.